டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு... கடைசி முறையாக கோப்பையை வெல்ல களமிறங்கும் வீராங்கனை

உலகக் கோப்பை தொடரே தனது கடைசி சர்வதேசத் தொடராக இருக்கும் என்று மேகன் ஆஸ்திரேலிய வீராங்கனை ஷட் கூறி இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை தொடரே தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று மேகன் ஷட் கூறி இருக்கிறார்.
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மேகன் ஷட், வரவிருக்கும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரே தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மேகன் ஷட், கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். மூன்று வடிவங்களிலும்(டி20, ஒருநாள், டெஸ்ட்) சேர்த்து 240 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 309 விக்கெட்டுகளை கைப்பற்றி மகளிர் கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில், தனது உலகக் கோப்பை இலக்கு குறித்து மேகன் ஷட் கூறுகையில்,

"இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு என்னிடம் இருக்கும் ஒரே வார்த்தை 'பசி' தான். அதைவிட, இது எனக்கு ஒரு பழிவாங்கும் வாய்ப்பாகவே தெரிகிறது. எப்படியாவது இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கடந்த இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களின் ஏமாற்றங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன. பல வெற்றிகளை அனுபவித்த எனக்கு அந்த தோல்விகள் இன்னும் வலிக்கின்றன. ஆனால் உலகக் கோப்பையை ஒருமுறையும் வெல்லாத இளம் வீராங்கனைகளை நினைத்துப் பார்க்கும்போது, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்கிறேன்" என்றார்.

Also Read
நார்வே செஸ் 2026: பிரக்ஞானந்தா, குகேஷ் அசத்தல்... கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி
டி20 உலகக் கோப்பை தொடரே தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று மேகன் ஷட் கூறி இருக்கிறார்.

மேலும், ஓய்வு குறித்து அவர் கூறுகையில்,

"நான் எதையும் முன்கூட்டியே திட்டமிடுபவர் அல்ல. ஆனால், ஒரு கட்டத்தில் ஓய்வு குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டிய நேரம் வரும். அதற்கான சரியான தருணமாக இதை நான் கருதுகிறேன். மற்றொரு ஐசிசி (ICC) தொடரில் நான் பங்கேற்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. எனது காலம் முடிந்துவிட்டது. இனி அடுத்த தலைமுறையினர் பொறுப்பேற்க வழிவிடுவதுதான் முக்கியம்" என்றார்.

7-வது உலகக் கோப்பையை நோக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே மகளிர் டி20 உலகக் கோப்பையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. தற்போது 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்குகிறது. அனுபவமும் இளமையும் கலந்த அணியுடன் ஆஸ்திரேலியா இந்த தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், மேகன் ஷட்டுக்கு வெற்றிகரமான பிரியாவிடையை அளிப்பதே அணியின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

முதல் போட்டி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தனது முதல் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. ஜூன் 13-ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டியுடன், மேகன் ஷட்டின் கடைசி உலகக் கோப்பை பயணம் தொடங்குகிறது. தனது பிரமாண்டமான சர்வதேச வாழ்க்கையை மேலும் ஒரு உலகக் கோப்பை வெற்றியுடன் நிறைவு செய்ய அவர் களமிறங்க உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com