அந்த 5 இந்திய வீரர்களை கண்டு ஆஸ்திரேலியா பயப்படும் - பாக்.முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியா இந்தியாவின் மனதுடன் விளையாடத் தொடங்கியுள்ளதாக பாசித் அலி தெரிவித்துள்ளார்.
அந்த 5 இந்திய வீரர்களை கண்டு ஆஸ்திரேலியா பயப்படும் - பாக்.முன்னாள் வீரர்
Published on

லாகூர்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்களான ஆஸ்திரேலியா இம்முறையும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தியாவின் மனதுடன் விளையாடத் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். குறிப்பாக ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து வங்காளதேசத்துக்கு எதிராக சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளதால் அவரை ஆஸ்திரேலிய அணியினர் குறி வைத்துள்ளதாகவும் பாசித் அலி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியா மனதளவில் விளையாடுகின்றனர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோரைக் கண்டு ஆஸ்திரேலியா பயப்படும். ரிஷப் பண்ட் சமீபத்தில் நல்ல ரன்கள் எடுத்துள்ளார். எனவே ஆஸ்திரேலியா மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அவர்கள் ரிஷப் பண்ட்டை குறி வைக்க முயற்சிக்கின்றனர். இதுவே அவர்களுடைய மனநிலை. அவர்கள் வேறு எதையோ காட்டுகிறார்கள். மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com