

பிரிஸ்டல்,
இந்திய அணிக்கு கேப்டனாக இல்லாமல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி, அக்சர் படேலுக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.
இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை அக்சர் படேல் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.
அக்சர் படேலின் இந்த சாதனையில் ஒரு தனித்துவமான அம்சமும் உள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ஒரு முறை கூட தேசிய அணிக்கு கேப்டனாக செயல்படாமல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அக்சர் படேல் பல இருதரப்பு தொடர்களிலும், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், இதுவரை இந்திய அணியை ஒரு போட்டியில்கூட கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள்:
ரோகித் சர்மா- 159 போட்டிகள்
ஹர்திக் பாண்டியா - 138 போட்டிகள்
விராட் கோலி - 125 போட்டிகள்
சூர்யகுமார் யாதவ் - 113 போட்டிகள்
அக்சர் படேல் - 100 போட்டிகள்