பீல்டிங்கின்போது தலையில் அடிபட்ட அக்சர்... பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா..?


பீல்டிங்கின்போது தலையில் அடிபட்ட அக்சர்... பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவாரா..?
x

தலையில் அடிபட்ட பிறகு அவர் பீல்டிங் செய்ய மீண்டும் களத்திற்கு வரவில்லை.

அபுதாபி,

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பீல்டிங் செய்கையில் 15வது ஓவரில் ஓமன் வீரர் ஹம்மத் மிர்சா அடித்த பந்தை பிடிக்க ஓடிவந்த அக்சர் படேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்படி விழுகையில் அவரது தலை நேரடியாகத் தரையில் பலமாக மோதியது. இதனால் வலியால் துடித்த அவர், தனது தலையையும் கழுத்துப் பகுதியையும் பிடித்துக்கொண்டார். உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் விரைந்து வந்து, அவரை மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றார். அதன் பிறகு, அவர் பீல்டிங் செய்ய மீண்டும் களத்திற்குத் திரும்பவில்லை.

இதனால் அவருக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் இந்திய அணி அடுத்து சூப்பர்4 சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் நாளை விளையாட உள்ளது. அந்த போட்டிக்கு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் மிகவும் முக்கியம். இதனிடையே இந்த காயம் காரணமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் அக்சர் படேல் தற்போது நலமுடன் இருப்பதாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.

1 More update

Next Story