

தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும், 2012ஆம் ஆண்டு இந்தியா அண்டர்-19 உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவருமான பாபா அபராஜித், தனது 32 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 15 ஆண்டுகால அவரது உள்ளூர் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் தேதி கேரளா அணிக்காக சண்டிகர் அணிக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி முதல்தரப் போட்டியாக அமைந்தது. தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்த அவர், கிரிக்கெட் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள், சவால்கள், நட்புகள் மற்றும் நினைவுகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதவை என்று தெரிவித்துள்ளார்
கடந்த 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதில் பாபா அபராஜித் முக்கியப் பங்காற்றினார். அந்தத் தொடரில் 171 ரன்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான காலிறுதி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தினார். தனது 17 வயதில் 2011ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி அணியில் அறிமுகமான அவர், பின்னர் தமிழக அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். தனது இரட்டைச் சகோதரர் பாபா இந்திரஜித்துடன் இணைந்து தமிழக அணிக்காகப் பல போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்
உள்ளூர் கிரிக்கெட்டில் 102 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அபராஜித், 12 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் உட்பட 5,198 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 114 லிஸ்ட் ஏ போட்டிகளில் 4,278 ரன்களும், 63 டி20 போட்டிகளில் 1,147 ரன்களும் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான உள்ளூர் போட்டிகளிலும் 10,623 ரன்களும், 175 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். தமிழக அணி 2017–18 விஜய் ஹசாரே கோப்பையையும், 2020–21 மற்றும் 2021–22 சையத் முஷ்டாக் அலி கோப்பைகளையும் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளின் ஐபிஎல் குழுவிலும் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு ஒருமுறைகூட ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.