வங்காளதேச வீரர்களின் மோசமான முடிவுகளை விமர்சித்த உதவி பயிற்சியாளர்

மனரீதியான தயாரிப்பை உதவி பயிற்சியாளர் மாலிபோங்கே மகேட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.
வங்காளதேச வீரர்களின் மோசமான முடிவுகளை விமர்சித்த உதவி பயிற்சியாளர்
Published on: 

தென்ஆப்பிரிக்கா – வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணியின் மோசமான பேட்டிங் முடிவுகள் மற்றும் மனரீதியான தயாரிப்பை உதவி பயிற்சியாளர் மாலிபோங்கே மகேட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.

செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் நாளில் மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த வங்காளதேச அணி, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் 33.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்கோ யான்சென், கசிசோ ரபடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

வங்காளதேச அணி

இதுகுறித்து வங்காளதேச அணியின் உதவி பயிற்சியாளர் மாலிபோங்கே மகேட்டா கூறுகையில், "ஒட்டுமொத்தமாக மிகவும் ஏமாற்றம் அளித்த நாள் இது. எங்களது பேட்ஸ்மேன்களின் தவறான முடிவுகளே விக்கெட்டுகள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சில சிறப்பான பந்துகளை வீசினார்கள். ஆனால், அதற்காக நாங்கள் இவ்வளவு குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்கக் கூடாது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "பச்சை நிறம் கொண்ட ஆடுகளத்தில் விளையாடுவதற்கு தேவையான மன உறுதியும், பொறுமையும் எங்களிடம் குறைவாக இருந்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமான பிறகு உடனடியாக பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தச் சவாலை எதிர்கொள்ள வீரர்கள் மனதளவில் தயாராக இருக்கவில்லை. குறிப்பாக பவுன்ஸ் அதிகமாக இருக்கும் ஆடுகளங்களில் எவ்வாறு விளையாட வேண்டும் என்ற திட்டத்தை இன்னும் சரியாகச் செயல்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.

தொடக்க வீரர்கள் மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றும், லிட்டன் தாஸ் ஒவ்வொரு முறையும் நெருக்கடியான சூழலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலையை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். லிட்டன் தாஸ் சிறந்த வீரர் என்றும், அவரால் மட்டுமே தொடர்ந்து ரன்கள் குவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், டவ்ஹித் ஹிரிடாய் ஆட்டமிழந்த விதம் குறித்தும் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச உள்ளதாக மகேட்டா தெரிவித்தார். தொடக்கத்தில் இருந்தே பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்திட்டத்தைப் பின்பற்றி, அவசரப்படாமல் விளையாடுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

முதல் இன்னிங்சில் ஏற்பட்ட இந்த மோசமான சரிவில் இருந்து மீண்டு வந்து போட்டியில் வலுவான பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் வங்காளதேச அணி உள்ளது.

X