

துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 33.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் 4 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
தோல்வி தொடர்பாக பேசிய வங்கதேச கேப்டன் ஹிரிடாய் கூறியதாவது,
உண்மையில் எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் நன்றாக இருந்தது. பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சில தவறுகளைச் செய்துவிட்டோம். தொடக்கத்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், நடுப்பகுதியில் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஜிம்பாப்வே அணியை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும். ஏற்கெனவே கூறியதுபோல, எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், பேட்டிங் யூனிட்டாக நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற இலக்குகளை வெற்றிகரமாகத் துரத்த முடிந்திருக்க வேண்டும்.
டி.ஆர்.எஸ். (DRS) முடிவுகள் குறித்து நிச்சயமாக அணிக்குள் ஆலோசனை நடத்துவோம். சில நேரங்களில் பந்துவீச்சாளரையும் நடுவரையும் நம்ப வேண்டியதும் அவசியம்.
இந்தத் தோல்வி நிச்சயமாக ஏமாற்றமளிக்கிறது. பேட்டிங் செய்வதற்கு ஏற்ற ஆடுகளமாகவே இது இருந்தது. ஆனால், நாங்கள் தேவையற்ற தவறுகளைச் செய்துவிட்டோம். இந்தத் தவறுகளிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.
எனது நாட்டின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்குத் முதல் முறையாகக் கேப்டனாகப் பொறுப்பேற்றது எனக்குப் பெருமையான தருணம். அதேபோல், எனது குடும்பத்தினருக்கும் இது பெருமையான தருணம். இந்தப் பயணம் தொடர்ந்து சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். என்று வங்கதேச அணியின் கேப்டன் தவ்ஹித் ஹிரிடாய் தெரிவித்துள்ளார்.