துப்பாக்கி சூட்டில் தப்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர் - தமிம் இக்பால் உருக்கம்

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர்.
துப்பாக்கி சூட்டில் தப்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர் - தமிம் இக்பால் உருக்கம்
Published on

டாக்கா,

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் கடந்த 15-ந்தேதி பிற்பகலில், பயங்கரவாதி நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் சம்பவம் நடந்த சமயத்தில் அதே மசூதிக்கு தொழுகை நடத்த செல்ல இருந்தனர். மசூதி அருகே சென்ற அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்து அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து-வங்காளதேசம் இடையே நடக்க இருந்த 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாயகம் திரும்பினர். டாக்கா விமான நிலையத்தில் பேட்டி அளித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் மக்முதுல்லா கூறும் போது, இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்று மட்டுமே சொல்ல முடியும். உங்களது பிரார்த்தனையால் தான் உயிரோடு தாயகம் திரும்பியிருக்கிறோம் என்றார்.

திக்..திக்... அனுபவம் குறித்து வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் கூறுகையில், நாங்கள் மசூதிக்கு பிற்பகல் 1.30 மணிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கேப்டன் மக்முதுல்லா பேட்டி கொடுக்க சற்று நேரம் ஆனது. அவர் பேட்டியை முடித்துக்கொண்டு ஓய்வறைக்கு சென்ற போது, அங்கு முஷ்பிகுரும், தைஜூல் இஸ்லாமும் வீடியோ கேமில் கால்பந்து ஆடிக்கொண்டிருந்தனர். உடனடியாக ஆட்டத்தை முடிக்க அவர்கள் விரும்பவில்லை. அதிலும் சில நிமிடங்கள் ஆனது. இவ்வாறு தாமதம் ஆன 3-4 நிமிடங்கள் தான் எங்களது உயிரை காப்பாற்றி இருக்கிறது.

பஸ்சில் புறப்பட்ட நாங்கள் மசூதியில் இருந்து கிட்டத்தட்ட 60 அடி தூரத்தில் நின்ற போது தான் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சிலர் ரத்தக்காயங்களுடன் ஓடி வருவதை கண்டோம். இதனால் எங்களுக்குள் பயம் தொற்றிக்கொண்டது. பஸ்சில் 8-10 நிமிடங்கள் பதுங்கிய நாங்கள் அதன் பிறகு அங்கிருந்து ஓடி மைதானத்திற்கு சென்று தப்பினோம். எங்களது அறைக்கு சென்றதும் பயங்கரவாதி நடத்திய தாக்குதலை வீடியோவில் கண்டு மிரண்டு போனோம். அன்று இரவில் எங்களால் சரியாக தூங்க முடியவில்லை. கண்ணை மூடினால் அந்த கொடூரம் தான் வந்து நின்றது. இந்த சம்பவத்தை எங்களது வாழ்நாளில் மறக்க முடியாது. கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் நின்ற போது, அங்கு கொஞ்சம் முன்கூட்டியே சென்றிருந்தால் இந்த நேரம் பிணமாகத் தான் தாயகம் திரும்பியிருப்போம் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். எல்லாமே ஒரு 30 வினாடிகள் தான் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com