

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜெரால்ட் கோட்ஸி (Gerald Coetzee), க்வேனா மபாகா (Kwena Maphaka) ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சுப் பலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, லயன்ஸ் அணிக்காக நார்த் வெஸ்ட் டிராகன்ஸ் அணிக்கு எதிரான முதல் தரப் போட்டியில் விளையாடியபோது காயமடைந்தார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 என இரு வகை கிரிக்கெட் தொடர்களிலும் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இரு தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான க்வேனா மபாகா பயிற்சியின்போது காயமடைந்தார் இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த தென்னாப்பிரிக்கா ஏ அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கோட்ஸிக்கு பதிலாக ஒருநாள் அணியில் டியான் வான் வியூரன் (Tiaan van Vuuren) முதல்முறையாக இடம் பிடித்துள்ளார். டி20 அணியில் ஆல்-ரவுண்டர் ஈதன் போஷ் (Eathan Bosch), சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகாத வேகப்பந்து வீச்சாளர் ஜே.ஜே. பாசன் (JJ Basson) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்கா ஏ அணியில் பயாண்டா மொஜோலா, ஒகுஹ்லே செலே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான இந்த வெள்ளைப் பந்து தொடரில் 3 ஒருநாள் போட்டிகளும், 3 டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 4 மற்றும் 7-ம் தேதிகளில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகள் நடைபெறும். டி20 தொடர் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி நிறைவடைகிறது.
முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருவர் காயத்தால் விலகியிருப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில் இளம் வீரர்களான வான் வியூரன், ஈதன் போஷ், பாசன் ஆகியோருக்கு சர்வதேச அளவில் தங்களது திறமையை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.