எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்காளதேசம் முடிவெடுக்க வேண்டும்: தமிம் இக்பால்

வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
கொல்கத்தா,
2026 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும்இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.
இந்த நிலையில், வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது. அத்துடன் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது.
இதற்கிடையே , வீடியோ கான்பரன்ஸ் மூலம் வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஐ.சி.சி. போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
ஆனால் வங்காளதேச அரசு அந்த நாட்டு அணி இந்தியாவுக்கு சென்று விளையாடக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா-வங்காளதேசம் இடையிலான தற்போதைய நிலைமை சற்று சிக்கலாக இருக்கிறது. எனவே இப்போது கருத்து தெரிவிப்பது கடினமானதாகும். ஆனால் அனைவரும் ஒன்றிணைந்தால் பல பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். உலக கிரிக்கெட்டில் வங்காளதேசம் எந்த நிலையில் உள்ளது. வங்காளதேச கிரிக்கெட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தபடி முடிவை எடுக்க வேண்டும்.
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை நாங்கள் ஒரு தன்னாட்சி அமைப்பாக கருதுகிறோம். இருப்பினும் அரசாங்கம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அரசாங்கத்துடன் விவாதிக்க வேண்டியது அவசியமானதாகும்.
இன்றைய முடிவுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வங்காளதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கும், வீரர்களுக்கும் எது சிறந்ததாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், வங்காளதேச கிரிக்கெட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.






