பெங்களூரு நெரிசல்: ஆர்சிபி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்


பெங்களூரு நெரிசல்: ஆர்சிபி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
x

image courtesy: PTI and twitter/@RCBTweets

ஆர்.சி.பி. அணி வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.

இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இதனால் பாதுகாவலர்களும், போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். அதே நேரத்தில் எப்படியும் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று பெங்களூரு அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முயன்றனர்.

இதனால் பெரும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக நேற்று கர்நாடக அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story