

ஐதராபாத்,
ஐபிஎல் 2026 தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் கிளாசன் ஆகியோரின் அதிரடி அரைசதங்களின் உதவியுடன் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஐபிஎல் வரலாற்றில் மோசமான ஒரு சாதனையை பதிவு செய்துள்ளார். தனது 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், 9 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை வழங்கிய 2-வது பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த பட்டியலில் ஏற்கனவே 9 முறை 50+ ரன்களை விட்டுக்கொடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார். தற்போது புவனேஷ்வர் குமாரும் அவருடன் இணைந்துள்ளார். இதற்கு முன்பு 8 முறை 50+ ரன்களை வழங்கியிருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை புவனேஷ்வர் குமார் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இருப்பினும், நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி 'பர்பிள் கேப்' பட்டியலில் புவனேஷ்வர் குமார் முன்னிலையில் உள்ளார்.