பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்: வரலாறு படைத்த பிரிஸ்பேன் ஹீட்

பிரிஸ்பேன் ஹீட் தரப்பில் ஜாக் வைல்டர்முத் மற்றும் மேட் ரென்ஷா இருவரும் சதமடித்தனர்.
image courtesy:twitter/@BBL
image courtesy:twitter/@BBL
Published on

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக்கின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பின் ஆலன் 79 ரன்களும், கூப்பட் கனோலில் 77 ரன்களும் அடித்தனர். பிரிஸ்பேன் தரப்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 258 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோ கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து கை கோர்த்த ஜாக் வைல்டர்முத் - மேட் ரென்ஷா அதிரடியாக ஆடியது.

பெர்த் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி தள்ளியது. இவர்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல் பெர்த் அணி தடுமாறியது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் இருவரும் சதமடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரென்ஷா 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் தனது பங்குக்கு 28 ரன்கள் அடித்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். இருப்பினும் நிலைத்து ஆடிய ஜாக் வைல்டர்முத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார்.

19.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பிரிஸ்பேன் ஹீட் 258 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. ஜாக் வைல்டர்முத் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதன் மூலம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் படைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com