தொடர்ந்து 3 ‘நோ லுக்’ சிக்சர்கள் விளாசிய பிரெவிஸ்... வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பிரெவிஸ் அரைசதம் விளாசினார்.
கெய்ன்ஸ்,
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 53 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் பிரெவிஸ் வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். குறிப்பாக இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தபோது 9-வது ஓவரை ஆரோன் ஹார்டி வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட பிரெவிஸ் முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே அடித்தார்.
அதன்பின் வீசப்பட்ட கடைசி 4 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சருக்கு பறக்க விட்டு அரைசதம் விளாசினார். அதிலும் முதல் 3 சிக்சர்களை ‘நோ லுக்’ ஷாட் (பந்தை அடித்த பிறகு, பேட்ஸ்மேன் பந்து எங்கு செல்கிறது என்பதை பார்க்காமல் இருப்பது) மூலம் அடித்து மிரள வைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.






