பிரதர், ரொம்ப வலிக்கிறது... அதற்கு முதலில் ஊசி போடுங்கள்: ரிஷப் பண்ட்

விபத்தில் சிக்கிய பண்ட், ஒரு நல்ல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கேட்டு கொண்ட பின், 12 கி.மீ. தொலைவில் ரூர்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிரதர், ரொம்ப வலிக்கிறது... அதற்கு முதலில் ஊசி போடுங்கள்: ரிஷப் பண்ட்
Published on

டேராடூன்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.

டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டை, அந்த வழியே சென்ற, அரியானா போக்குவரத்து கழகத்தின் பானிபட் டெப்போவுக்கு உட்பட்ட பஸ் ஓட்டுனர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் ஆகிய அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் இருவரும் காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில், பண்ட்டை 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது, உதவிக்கு மருந்தாளுனர் மோனு குமார் என்பவர் உடன் சென்றுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பஸ் ஓட்டுனர் ரிஷப் பண்ட்டை காரில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டு ஆம்புலன்சை அழைத்துள்ளார்.

ரிஷப் பண்ட்டுக்கு கண், மூக்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மூக்கில் ரத்தம் வழிந்தோடியது. அவரது பின்புறத்திலும், காலிலும் கூட காயம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பண்டிடம் மோனு உங்களது பெயர் என்ன? என கேட்டுள்ளார். அதற்கு பண்ட் தனது பெயர் ரிஷப் பண்ட் என்றும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் எனவும் கூறினார்.

அதன்பின்பு, மோனுவிடம் பண்ட், அதிகம் வலியாய் இருக்கிறது. முதலில், வலி நிவாரணத்திற்கான ஊசியை போடுங்கள் என கூறியுள்ளார். இதன்பின்பு, 108 ஆம்புலன்சில் இருந்தவர்களிடம் அனுமதி பெற்று வலி நிவாரணி ஊசியை போட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, மோனுவிடம் பண்ட், ஒரு நல்ல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார். பண்ட்டை விபத்து பகுதியில் இருந்து 10-12 கி.மீ. தொலைவிலுள்ள ரூர்கியில் உள்ள சாக்ஷாம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com