புச்சிபாபு கோப்பை: சர்பராஸ் அதிரடி சதம்.. மும்பை அணி முதல் நாளில் 367 ரன்கள் குவிப்பு

மும்பை தனது முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணியுடன் விளையாடி வருகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கார், மராட்டியமும், பி பிரிவில் இந்தியன் ரெயில்வே, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, பரோடாவும், சி பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன், மும்பை, அரியானா, பெங்காலும், டி பிரிவில் ஐதராபாத், பஞ்சாப், மத்தியபிரதேசம், ஜார்கண்டும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். லீக் ஆட்டங்கள் 3 நாட்களும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி 4 நாட்களும் நடைபெறும்

அதன்படி இன்று தொடங்கிய ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி 98 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய சர்பராஸ் கான் அடித்து ஆடி அணிக்கு வலு சேர்த்தார். அவருடன் சேர்ந்து சுவேத் பார்கர் நிதானமாக ஆடினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணியின் பந்துவீச்சை அடித்து ஆடிய சர்பராஸ் கான் 92 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதன் பின்னரும் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 114 பந்துகளில் 138 ரன்கள் அடித்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். சுவேத் பார்கர் 72 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் மும்பை அணி முதல் நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் அடித்துள்ளது. ஆகாஷ் பார்கர் 67 ரன்களுடன் களத்தில் உள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் தரப்பில் சித்தார்த் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இத்தகைய சூழலில் நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com