பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும் - முன்னாள் பயிற்சியாளர்

Image Courtesy: @BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி இடம் பிடித்தனர். இந்த போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளனர். இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய அணியின் தேர்வு ஆச்சரியமாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்.
லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






