குஜராத் அணியின் இந்த நிலைமைக்கு கேப்டன் கில்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர்

மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் தோல்வியடைந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

முல்லான்பூர்,

ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் அடித்தார். குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 80 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் குஜராத் அணி வெளியேறியது.

இந்நிலையில் குஜராத் அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில் எடுத்த தவறான முடிவுதான் காரணம் என்று இந்திய முன்னாள் வீரரான உத்தப்பா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "குஜராத் அணியின் உத்தி சிறப்பாக செயல்படுவதை விட அவர்களுக்கே எதிர்வினையாற்றுவதாக இருந்தது. இந்த வருடம் மிடில் ஓவர்களில்தான் பிரசித் கிருஷ்ணா வெற்றிகரமாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு. முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா நிறைய ரன்களை வழங்கினார். எனவே அவருக்கு 2வது ஓவரை வழங்காமல் தவிர்த்திருக்க வேண்டும். அதனையும் கில் செய்யவில்லை.

அவர்கள் சரியான திசையில் செல்லத் தவறிவிட்டனர். அவருடைய 2 ஓவர்களில் மும்பை முறையே 26, 22 ரன்கள் அடித்தது குஜராத்துக்கு தோல்வியைக் கொடுத்தது. இது போக அவர்களுடைய பீல்டிங் துறை குஜராத்தை தலை குனிய வைத்தது. இவ்வளவு கேட்சுகளை தவற விட்ட நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்று எதிர்பார்க்க கூடாது" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com