

லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 6 ஓவர்களில் 21 ரன்கள் அடித்துள்ளது. ஜாக் கிராலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 351 ரன்கள் அடிக்க வேண்டும். இந்தியா வெற்றி பெற 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.இத்தகைய பரபரப்பான சூழலில் "இன்று கடைசி நாள் ஆட்டம்"நடைபெற உள்ளது
இந்த டெஸ்டில் இரு இன்னின்சிலும் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சில சாதனைகளை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2-வது இன்னிங்சில் 118 ரன்களும் விளாசினார். டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 7-வது இந்தியர் ஆவார்.
இதற்கு முன்பு விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3 முறை), ராகுல் டிராவிட் (2 முறை), விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா ஆகிய இந்தியர்கள் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர். ஆனால் இங்கிலாந்து மண்ணில் இரு இன்னிங்சிலும் சதம் கண்ட முதல் இந்தியர் பண்ட் தான்.
விக்கெட் கீப்பர் ஒருவர் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் காண்பது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் 2001-ம் ஆண்டில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (142 ரன் மற்றும் 199 ரன்) சதம் அடித்திருந்தார்.
லீட்ஸ் டெஸ்டில் ரிஷப் பண்ட் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 9 சிக்சர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களான இங்கிலாந்தின் பிளின்டாப், பென் ஸ்டோக்ஸ் (தலா 9 சிக்சர்) ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.