சஹால் அசத்தல் பந்துவீச்சு : இந்தியாவுக்கு 247 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி

சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
Image Tweeted By @BCCI  
Image Tweeted By @BCCI  
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் களமிறங்கினர். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா பந்துவீச்சில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து ரூட் களமிறங்கினார்.

டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த ரூட்- பேர்ஸ்டோவ் இன்று சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைக்க தவறினர். பேர்ஸ்டோவ் 38 ரன்களிலும் ரூட் 11 ரன்கள் எடுத்தும் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.

இருப்பினும் பின் வரிசையில் லிவிங்ஸ்டோன் (33) மொயின் அலி (47) இருவரும் மோசமான ஸ்கோரில் இருந்து அணியை மீட்கும் வகையில் பங்களிப்பை அளித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதை அடுத்து 247 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com