சாம்பியன்ஸ் டிராபி: சாண்ட்னரின் சிறப்பான கேப்டன்சிக்கு தோனிதான் காரணம் - இந்திய முன்னாள் வீரர்


சாம்பியன்ஸ் டிராபி: சாண்ட்னரின் சிறப்பான கேப்டன்சிக்கு தோனிதான் காரணம் - இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy: BCCI

தினத்தந்தி 8 March 2025 12:58 PM IST (Updated: 8 March 2025 1:24 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல்.தொடரில் சென்னை அணியில் தோனியின் தலைமையின் கீழ் சாண்ட்னர் விளையாடியுள்ளார்.

மும்பை,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் மகத்தான வெற்றி பெற்று கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் நியூசிலாந்து லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே தோல்வி கண்டுள்ளது. இதனால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து முயற்சிக்கும். அதேவேளை ஐ.சி.சி. தொடர்களின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தியது இல்லை. அந்த மோசமான வரலாற்றை மாற்றியமைக்க இந்திய அணி முயற்சிக்கு என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு தொடரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சாண்ட்னரின் கேப்டன்ஷிப் கருதப்படுகிறது. பீல்டிங் வியூகத்திலும், பவுலர்களை மாற்றுவதிலும் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் முக்கியமான தருணத்தில் விக்கெட்டும் கைப்பற்றி அணிக்கு வலு சேர்க்கிறார்.

இந்நிலையில் சாண்ட்னரின் இந்த சிறப்பான கேப்டன்சி திறமைக்கு தோனிதான் காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "எம்.எஸ். தோனியின் கீழ் விளையாடுவது அவருக்கு ஒரு மதிப்புமிக்க அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சி.எஸ்.கே-வுடன் பல ஆண்டுகள் கழித்த பிறகு, தோனி போன்ற ஒருவருடன் இருப்பது உங்களுக்கு கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. சாண்ட்னர் தோனியின் அருகில் இருந்து பல்வேறு விஷயங்களை நுணுக்கமாக கவனித்திருக்கிறார்.மேலும், அவர் அணியில் கேன் வில்லியம்சன் இருக்கிறார். அவரும் ஒரு சிறந்த கேப்டன்" என்று கூறினார்.

ஐ.பி.எல். தொடரில் மிட்செல் சாண்ட்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2018-ம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை இடம் பிடித்திருந்தார். அதில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார்.

1 More update

Next Story