சாம்பியன்ஸ் டிராபி: அவரை தேர்வு செய்ததற்காக ரோகித்துக்கு தலை வணங்குகிறேன் - ரெய்னா

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
மும்பை,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் முதல் முறையாக 50 ஓவர் வடிவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகி விளையாடாத போதிலும் ஜெய்ஸ்வாலை நம்பி சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுத்த ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குவதாக இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அந்த பையன் (ஜெய்ஸ்வால்) ரன்களுக்காக பசியுடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரை பார்க்கும் போதெல்லாம் அவர் இந்த லெவலுக்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது. அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத அந்த பையனை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள். அவர் நிறைய கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியும்.
அவருடைய கண்களில் வித்தியாசமான அணுகுமுறை தெரிகிறது. அதே சமயம் வித்தியாசமான அமைதியையும் கொண்டுள்ள அவர் தயாராக இருப்பது போல் தெரிகிறது. இதுதான் இந்திய கிரிக்கெட்டின் அழகாகும். நீங்கள் கடினமாக உழைத்து நாட்டுக்காக விளையாடும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் ஏதேனும் ஒரு பவர் உங்களை விளையாட வைக்கும். அதைத்தான் ஜெய்ஸ்வால் விஷயத்தில் ரோகித் செய்துள்ளார்" என்று கூறினார்.