சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல் சாதனை

நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
image courtesy:twitter/@ICC
image courtesy:twitter/@ICC
Published on

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று அரங்கேறிய 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், நியூசிலாந்தும் (ஏ பிரிவு) மல்லுகட்டின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இந்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேலும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா போராடினார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் மொத்தமான சரணடைந்தது. அந்த அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, அக்சர் மற்றும் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் 4 சுழற்பந்து வீச்சாளர்களும் (ஜடேஜா, வருண், அக்சர், குல்தீப்) சேர்ந்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தனர். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது. தற்போது பாகிஸ்தானின் சாதனையை முறியடித்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com