சாம்பியன்ஸ் டிராபி: அதிவேக சதம்.. சேவாக்கின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ஜோஷ் இங்லிஸ்

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜோஷ் இங்லிஸ் சதம் அடித்து அசத்தினார்.
லாகூர்,
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை சந்தித்தது.
இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 120 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லிஸ் வெறும் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சேவாக்கின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார். சேவாக் 2002-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக 77 பந்துகளில் சதமடித்திருந்தார்.
அந்த பட்டியல்:-
1. சேவாக்/ஜோஷ் இங்லிஸ் - 77 பந்துகள்
2. ஷிகர் தவான் - 80 பந்துகள்
3.தில்ஷன் - 87 பந்துகள்






