சாம்பியன்ஸ் கோப்பை: சேவாக்கின் 23 ஆண்டு கால சாதனையை முறியடித்த மில்லர்


சாம்பியன்ஸ் கோப்பை: சேவாக்கின் 23 ஆண்டு கால சாதனையை முறியடித்த மில்லர்
x

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய வீரர் சேவாக்கின் 23 ஆண்டு கால சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் மில்லர் முறியடித்து உள்ளார்.

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்தது.

363 ரன் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கும் முன்னேறலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களம் புகுந்தது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ரிக்கெல்டன் மற்றும் தெம்பா பவுமா களம் இறங்கினர். இதில் ரிக்கெல்டன் 17 ரன்னில் அவுட் ஆனார்.

இதன்பின்னர் பவுமாவுடன் கைகோர்த்து வான் டெர் டுசென் விளையாடினார். இருவரும் அரைசதம் எடுத்தனர். இதில் பவுமா 56 ரன்களிலும், வான் டெர் டுசென் 69 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 31 ரன், கிளாசென் 3 ரன், வியான் முல்டர் 8 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இதன்பின்பு, அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் - மார்கோ ஜான்சென் ஜோடி சேர்ந்தனர். இதில் ஜான்சென் 3 ரன்களிலும், அடுத்து வந்த மஹராஜ் 1 ரன்களிலும், ரபடா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் மில்லர் 67 பந்துகளில் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். 18 பந்துகளில் 49 ரன்களை எடுத்ததும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

எனினும், தென் ஆப்பிரிக்க அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மில்லர் சதம் அடித்தபோதும், நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. அந்த அணி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த போட்டியில், அணியின் தோல்வியால் மில்லர் அடித்த சதம் வீணானது. எனினும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார். கொழும்புவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது, 77 பந்துகளில் சதம் அடித்த சேவாக்கின் சாதனை முறியடிக்கப்பட்டது.

23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் மில்லர் விரைவாக சதம் அடித்து உள்ளார். ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. ஆனால், மறுபுறம் மில்லர் ரன்களை சேர்க்க தொடங்கினார். இந்த தொடரில், மில்லர் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்ததும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story