சாம்பியன்ஸ் டிராபி: கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிறைவான தொடர், கச்சிதமான முடிவு! சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பையை வென்ற இந்திய அணிக்கும், கடுமையாக போட்டியிட்ட நியூசிலாந்து அணிக்கும் வாழ்த்துகள். ரோகித் சர்மாவும், அவரது அணியினரும், சூழலுக்கு ஏற்ப தொடர் முழுதும் சிறப்பாக விளையாடினர்" என்று பதிவிட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "துபாயில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
இந்த தொடர் முழுவதும் கேப்டன் ரோகித் தலைமையிலான இந்திய அணியின் நிலையான செயல்திறன் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தது. நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு பாராட்டுகள். அவரது சுழற்பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக உள்ளது. இந்திய அணியின் வெற்றி பயணம் தொடரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதே போல், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், "2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.






