சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் யாரையாவது நீக்கிவிட்டு அவரை சேர்க்க வேண்டும் - அஸ்வின்


சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் யாரையாவது நீக்கிவிட்டு அவரை சேர்க்க வேண்டும் - அஸ்வின்
x

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

சென்னை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலிருந்து யாரையாவது நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டுள்ளார். எனவே என்னை பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது இந்திய அணி ஒரு தற்காலிக அணியைத்தான் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. இதில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் என்னை பொறுத்தவரை யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும். அதேபோல சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒரு வீரரை நேரடியாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அனுப்புவது சரியான விஷயமாக இருக்காது.

மேலும் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் போட்டியில் விளையாடியதும் கிடையாது. எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பின்னர் அதில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டும்" என்று கூறினார்.


Next Story