சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப்பின் நியூசிலாந்து கேப்டன் கூறியது என்ன..?


சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப்பின் நியூசிலாந்து கேப்டன் கூறியது என்ன..?
x

image courtesy:ICC

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து தோல்வியடைந்தது.

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்த தோல்விக்குப்பின் நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பேசுகையில், "நாங்கள் விளையாடிய பிட்ச் மெதுவாக இருந்தது. அது எங்களுக்கு தெரியும். இந்தியா மிடில் ஓவர்களை சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். ஸ்ரேயாஸ் சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். ஹர்திக் பாண்ட்யா நன்றாக பினிஷிங் செய்தார். நாங்கள் நினைத்ததை விட பிட்ச் சுழலுக்கு அதிக சாதகமாக இருந்தது. அதை 4 தரமான ஸ்பின்னர்கள் வைத்து இந்திய அணி சரியாக பயன்படுத்தினார்கள். பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பது எங்களுக்கு வெற்றிக்கான சாவியாகும்.

எங்களுடைய அடுத்தப் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. அங்கே ஹென்றி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அங்குள்ள பிட்ச்சில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். அது போன்ற சூழ்நிலைகளில் தென் ஆப்பிரிக்காவிடம் 4 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச்சா அல்லது புதிதா என்பதை பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

1 More update

Next Story