சாம்பியன்ஸ் டிராபி; இறுதிப்போட்டியில் வெல்வது யார்..? - பாக். முன்னாள் வீரர் கணிப்பு

Image Courtesy: @ICC
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வருகிற 9-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோத உள்ளன.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எந்த அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெறும்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இரண்டு அணிகளுக்குமே எந்த மாதிரியான ஆடுகளம் கிடைக்கப் போகிறது என்பது நன்றாக தெரியும்.
இந்தியா இதுவரை இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியை எதிர்த்து எவ்வாறு விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும். எனவே, இந்த போட்டி சுலபமான ஒன்றாக இருக்காது.
என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் இந்தியாவுக்கு 60 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், நியூசிலாந்து அணிக்கு 40 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணியை போன்று நியூசிலாந்து அணியிலும் திறமையான வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






