சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்; போட்டியை மழை பாதிக்க வாய்ப்பு?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-லக்னோ அணிகள் மோதும் ஆட்டம் சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.
சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்; போட்டியை மழை பாதிக்க வாய்ப்பு?
Published on

சென்னை

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இதுவரை 52 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை.

இந்த போட்டி தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 53-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

சென்னை அணி 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்ட லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சென்னை அணி தனது உத்வேகத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் லக்னோ அணி புள்ளி பட்டியலில் ஏற்றம் காண தீவிரமாக முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3 ஆட்டங்களில் லக்னோவும், 2 ஆட்டங்களில் சென்னையும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

சென்னையில் நேற்று மழை பெய்ததால் மாலை நடக்க இருந்த இரு அணிகளின் பயிற்சி ரத்து செய்யப்படது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம்:

சென்னை: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், கார்த்திக் ஷர்மா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, ஜாமி ஓவர்டான், அகில் ஹூசைன், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்,

லக்னோ: மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ் அல்லது அர்ஷின் குல்கர்னி, நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), மார்க்ரம், அக்ஷத் ரகுவன்ஷி, ஹிம்மாத் சிங், ஷபாஸ் அகமது, முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ், மொஷின் கான் அல்லது மயங்க் யாதவ், திக்வேஷ் ரதி.

X

Daily Thanthi
www.dailythanthi.com