

சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை ரசிகர்களை சந்தித்து மகிழ்விக்க சி.எஸ்.கே. சார்பில் 'ரோர் 26' என்ற பெயரில் மெகா ரசிகர்கள் திருவிழா சேப்பாக்கத்தில் நேற்று அரங்கேறியது.
இதில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சென்னை அணிக்காக ஆடிய 'சின்ன தல' என செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், மைக் ஹஸ்சி, டுவெய்ன் பிராவோ, முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், பத்ரிநாத், முரளி விஜய், ஜோகிந்தர் ஷர்மா, ஜகாதி, அனிருதா, அம்பத்தி ராயுடு, எல். பாலாஜி உள்ளிட்டோர் மைதானத்திற்குள் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முன்பு விளையாடிய பிராவோ, ஹைடன், பார்த்தீவ் பட்டேல் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தற்போது வெவ்வேறு அணிகளின் பயிற்சியாளர்களாக உள்ளனர்.
அவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அந்தந்த அணி நிர்வாகங்கள் அனுமதி அளித்ததாலேயே அவர்களால் இதில் கலந்துகொள்ள முடிந்தது. இதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகத்துக்கு சென்னை அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.