

நெல்லை,
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 115 ரன்களுக்குள் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை கட்டுப்படுத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க தவறியதால் வெற்றி வாய்ப்பை இழந்தது.