சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு?
Published on

கெய்ல் சொதப்பல்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி சூறாவளி 42 வயதான கிறிஸ் கெய்ல் இந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஜொலிக்கவில்லை. நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்சருடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார். நடப்பு உலக கோப்பை தொடரின் அதிக வயது வீரரான கிறிஸ் கெய்ல் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். கெய்லின் ஆட்டத்திறன் பாதிப்பும் வெஸ்ட் இண்டீஸ் அணி அரைஇறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ரசிகர்களை நோக்கி உற்சாகமாக பேட்டை உயர்த்தி காட்டியபடி சென்றார். எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த சக வீரர்கள் கைதட்டி ஊக்கப்படுத்தி கட்டித்தழுவி வரவேற்றனர். இதே போல் பீல்டிங்கின் போது உற்சாகமாக வலம் வந்த கெய்ல் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் கூட ஜாலியாக அரட்டை அடித்தார். இவற்றை பார்க்கும் போது வெஸ்ட் இண்டீசுக்காக கிறிஸ் கெய்ல் விளையாடிய கடைசி போட்டி போன்று தோன்றியது. வர்ணனையாளர்களும் இதுவே அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று கூறினர். ஆனால் ஓய்வு குறித்து கெய்ல் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றாலும் அவர் 20 ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து ஆட திட்டமிட்டுள்ளார். இலங்கையில் விரைவில் நடக்க உள்ள இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட கெய்ல் 2019-ம் ஆண்டுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஒதுங்கி விட்டார். 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் இதுவரை 79 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 2 சதம், 14 அரைசதம் உள்பட 1,899 ரன்கள் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் (சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட) 453 ஆட்டங்களில் விளையாடி 22 சதம், 87 அரைசதம் உள்பட 14,321 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1,045 சிக்சரும் அடங்கும். இரண்டு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் அங்கம் வகித்திருக்கிறார்.

பிராவோ விடைபெற்றார்

மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ ஏற்கனவே இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார். இதன்படி தனது கடைசி சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த அவருக்கு சக வீரர்கள் இருபுறமும் வரிசையாக நின்று மரியாதை செய்தனர். அவரும், கெய்லும் ஆட்டத்தின் முடிவை பற்றி கவலைப்படாமல் களத்தில் ரொம்ப மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். 38 வயதான பிராவோ இந்த ஆட்டத்தில் 10 ரன் எடுத்தார். பந்து வீச்சில் 4 ஓவர்களில் 36 ரன்களை வாரி வழங்கினாரே தவிர விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் 91 ஆட்டங்களில் விளையாடி 1,255 ரன்களும், 78 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். பிராவோவும் தொடர்ந்து 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார்.

எனது உடல் ஒத்துழைக்கும் வரை 20 ஓவர் லீக் வகையிலான போட்டிகளில் மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவேன் என்று பிராவோ குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com