உச்சகட்ட பரபரப்பு... சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடந்த 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இலங்கையுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில் கில் 4 ரன்களிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து திலக் வர்மா களமிறங்கினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இந்த இணை அதிரடியாக ஆடியது. இதில் சாம்சன் 39 ரன்களிலும், அடுத்து வந்த பாண்ட்யா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குசல் மென்டிஸ் களமிறங்கினர். இதில் குசல் மென்டிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய குசல் பெரரா, பதும் நிசங்கா உடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பதும் நிசங்கா பந்துகளை பவுண்டரி, சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். அவர் சதமடித்து அசத்தினார். மறுபுறம் அரைசதம் அடித்த குசல் பெரரா 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். முதல் பந்தில் நிசங்கா 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜனித் லியனகே 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க, ஸ்டிரைக் வந்த தசுன் ஷனகா 4-வது பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தசுன் ஷனகா 2 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை (6 பந்துகள்) கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இலங்கை அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.






