

பெங்களூரு,
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் இதுவரை 10,10,602 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12,610 பேர் உயிரிழந்து உள்ளனர். 36,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தொற்று உயர்ந்து வரும் சூழலில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, தர்ணா போராட்டம் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொது போக்குவரத்தில் இருக்கைக்கு கூடுதலாக மக்கள் பயணிக்க அனுமதி கிடையாது. வீட்டில் இருந்து பணிபுரிவது கூடியவரை தொடர வேண்டும்.
10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர்த்து அனைத்து பள்ளிகளும் மற்றும் விடுதிகளும் மூடப்படும். வாரியம் மற்றும் பல்கலை கழகங்களுக்கான தேர்வுகளுக்கு தயாராவோர் வகுப்புகளுக்கு செல்லலாம். மற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் மூடப்படும்.
உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடியபடி இருக்கும். திரையரங்குகள், பார்கள் மற்றும் உணவு விடுதிகளில் 50 சதவீத இருக்கைகளை நிரப்பி கொள்ளவே அனுமதி வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பு (கே.எஸ்.சி.ஏ.) கூறும்பொழுது, சனிக்கிழமை தொடங்கிய 2 நாள் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஞாயிற்று கிழமைக்கு பின்பு அனைத்து போட்டிகளும் தற்காலிக ரத்து செய்யப்படும்.
கர்நாடக அரசின் உத்தரவை எங்களுடைய நிர்வாகம் மறுஆய்வு செய்தது. அதில், கிரிக்கெட் விளையாட தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நடந்து வரும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மண்டல போட்டி தொடரை ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இன்று தொடங்கிய 2 நாள் போட்டி நாளை முடிவடையும். அதன்பின்னர் அனைத்து போட்டிகளும் தற்காலிக ரத்து செய்யப்படும். கொரோனா பாதிப்பு சூழ்நிலைகளை மறுஆய்வு செய்து தொடரின் மீதமுள்ள போட்டிகள் நடத்துவது பற்றி திட்டமிடப்படும் என அந்த அமைப்பின் பொருளாளர் வினய் கூறியுள்ளார்.