

புதுடெல்லி,
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர் (வயது 39). இந்திய அணிக்காக 147 சர்வதேச ஒரு நாள் போட்டிகள், 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 37 சர்வதேச டி20 போட்டிகளை விளையாடி உள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்ட இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அக்கட்சியால் வழங்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி கொண்ட காம்பீர் பிரசார பணிகளில் சுழன்று பணியாற்றி வெற்றி பெற்றார். டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 6,700 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.16 லட்சத்திற்கும் கூடுதலாக உயர்ந்தது. கொரோனா பாதிப்புகள், காற்று மாசுபாடு ஆகியவற்றால் பாதிப்படைந்த டெல்லி, நாட்டின் கொரோனா தலைநகராக விரைவில் மாற கூடும் என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று வேதனையுடன் தெரிவித்தது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.யான கவுதம் காம்பீர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் செய்தியில், வீட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். எனது கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறேன்.
அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றும்படி ஒவ்வொருவரையும் நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இதனை தீவிரமுடன் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.