உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் கோலி, வார்னர் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
image courtesy: ICC, BCCI twitter
image courtesy: ICC, BCCI twitter
Published on

சென்னை,

ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் 36 வயதான ரோகித் சர்மா களம் கண்டதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய அதிக வயது கேப்டன் என்ற சிறப்பை பெற்றார்.

* ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், பும்ரா பந்து வீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் ஆனார். உலகக் கோப்பை தொடரில் கோலி செய்த 15- வது கேட்ச் இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் செய்த இந்திய பீல்டர் என்ற பெருமையை தனதாக்கினார். இதற்கு முன்பு இந்திய வீரர்களில் கும்பிளே 14 கேட்ச் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

* இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் 41 ரன்களில் ஆட்டம் இழந்தார். முன்னதாக அவர் பவுண்டரியுடன் 9 ரன்னை எட்டிய போது உலகக் கோப்பை போட்டியில் 1000 ரன்களை கடந்தார். உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரராக சாதனை பட்டியலில் இணைந்தார். இந்த மைல்கல்லை தனது 19-வது இன்னிங்சிலேயே எட்டி இருக்கிறார். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் தலா 20 இன்னிங்சில் இந்த இலக்கை கடந்ததே சாதனையாக இருந்தது. அதை வார்னர் முறியடித்தார்.

* இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், இஷான்கிஷன் இருவரும் டக்-அவுட் ஆனார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன்னின்றி நடையை கட்டுவது இது 7-வது நிகழ்வாகும்.

* 2003-ம் ஆண்டில் இருந்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தங்களது முதல் ஆட்டங்களில் 'வீறுநடை' போட்ட ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது.

* உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். இதற்கு முன்பு 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது.

* ஐ.சி.சி. போட்டிகளில் (50 ஓவர் மற்றும் 20 ஓவர்) அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சச்சின் தெண்டுல்கரை (2,719 ரன்) தற்போது விராட் கோலி (2,785 ரன்) முந்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com