விமர்சனங்கள் வரும் போகும்... ஆனால்.. - கம்பீருக்கு இந்திய வீரர் ஆதரவு

image courtesy:PTI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்தது.
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். அதனால் இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்பதே பலருடைய கணிப்பாக இருந்தது. ஆனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி தொடரை சமன் செய்து அசத்தியது.
ஒருவேளை இந்த தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பார். ஏனெனில் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்திடம் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்தது. அந்த சூழலில் தற்போது கம்பீர் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை வைத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் விமர்சனங்கள் வரும் போகும் என்பதால் அதற்காக கவலைப்படக்கூடாது என இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆனால் கம்பீர் போன்ற போராடும் குணம் கொண்ட பயிற்சியாளர் இந்திய அணிக்கு கொடுக்கும் உத்வேகம் அனைவரிடமும் கிடைக்காது என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அணிக்காகப் போராடத் தயாராக இருக்கும் ஒரு வீரராக நாங்கள் அவரை (கம்பீர்) எப்போதும் பார்த்திருக்கிறோம். மேலும் கூட்டங்களின் போதும், அவர் அதே ஆற்றலை வீரர்களிடம் கொண்டு வருகிறார். அவர் தேசத்திற்காகவும் மாநிலத்திற்காகவும் கோப்பைகளை வென்ற ஒரு சாதனையாளர். மேலும் அவர் அந்த அனுபவங்கள் மற்றும் உந்துதல்கள் அனைத்தையும் அணிக்குள் கொண்டு வருகிறார். விமர்சனங்கள் வந்து போகும். ஆனால் ஒரு அணியாக, வெற்றி பெறுவது முக்கியம். அதைப் பொறுத்தவரை இந்திய அணி சரியான திசையில் செல்கிறது என்று நான் நம்புகிறேன் ” என கூறினார்.






