

பெங்களூரு,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கியுள்ளது.
கவுகாத்தியில் கடந்த 30ம் தேதி நடந்த 3வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான பேட்டிங், பந்து வீச்சை வெளிப்படுத்தியது. சென்னை 19.4 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து பெங்களூருவில் இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சை பெங்களூரு வீரர்கள் சிதறடித்தனர். பெங்களூரு 20 ஓவரில் 250 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து காண்போம்.
தலைமை பண்பு (கேப்டன்சி)
2024ம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமை பண்பு கேள்விக்குறியாகும் வகையிலேயே உள்ளது. கேப்டன்சியில் ருதுராஜ் முக்கிய முடிவுகளை எடுக்க தவறுவதே சென்னை அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருத்தப்படுகிறது.
கெய்க்வாட் தலைமையில் கடந்த ஆண்டு களமிறங்கிய சென்னை மிகவும் மோசமாக தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. தற்போது, அவரது கேப்டன்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
பொறுப்பேற்பு:
ஆட்டத்தில் தோல்வியடையும்போது அந்த தோல்விக்கு பொறுப்பேற்பு என்ற நிலை தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகவும் குறைவாகவே உள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர். கேப்டன் என்ற முறை ருதுராஜ் சில முடிவுகளுக்கு பொறுப்பு ஏற்கவேண்டிய நிலையில் உள்ளார். ஆனால், சில சமயங்களில் அவர் மைதானம், பந்து வீச்சாளர்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டியபோதும் தனது பொறுப்பையும் உணர்ந்து ருதுராஜ் செயல்பட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மினி ஏலம்:
நடப்பு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. ரூ. 43.40 கோடியுடன் மினி ஏலத்திற்கு சென்ற சென்னை அணி நிர்வாகம் சரியான வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.
பந்து வீச்சு:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக உள்ளது. இம்பெக்ட் ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர்கள் சென்னை அணியில் இடம்பெறவில்லை என்பது பெரும்பாலான ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது.
வீரர்கள் காயம்:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காத சூழ்நிலை நிலவி வருகிறது. டோனி, பிரேவிஸ், நாதன் எல்லிஸ் போன்ற வீரர்கள் காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களிலும் பங்கேற்கவில்லை. அதில், எல்லிஸ் ஒட்டுமொத்தமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார்.
சேப்பாக்கத்தில் தோல்வி:
கடந்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்சின் சொந்த மைதானமான (ஹோம் கிரவுண்ட்) சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதன்படி தொடர்ந்து 6வது முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது என்றால் அது எதிர் அணிகளுக்கு கலக்கத்தையே ஏற்படுத்தும். சேப்பாக்கத்தில் வெற்றிபெறமாட்டோம் என்ற அச்ச மனநிலையே எதிர் அணிகளுக்கு நிலவும்.
சென்னையின் கோட்டை என்று சேப்பாக்கம் மைதானம் கருதப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. எதிர் அணிகள் சேப்பாக்கத்தில் வெற்றியை தங்கள் வசப்படுத்தி வருகின்றன. சேப்பாக்கத்தில் வெற்றிபெறாத சூழ்நிலை சென்னை அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர் அனுகுமுறை:
சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் கடந்த 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய அணிகள் ஆண்டுக்கு ஆண்டு புதிய அனுகுமுறையை கையாண்டு வரும் நிலையில் சென்னை பயிற்சியாளர் அனுகுமுறையில் மாற்றமில்லை என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொடக்க வீரர்கள் தேர்வு:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்குகின்றனர். இருவரும் அனுபவம் மிக்க வீரர்கள் என்பதால் ஒருவர் பின்வரிசையில் களமிறங்குவது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கலாம். ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரரை தொடக்க வீரராக களமிறக்கி பவர் பிளே ஓவரில் அதிக ரன்களை எடுப்பது அணியின் ரன் வேட்டைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
பவர் ஹிட்டிங் வீரர்கள்:
சென்னை அணியில் பவர் ஹிட்டிங் வீரர்கள் இடம்பெறாதது அணியின் சரிவுக்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.
கேப்டன்சி மாற்றம்:
கடந்த ஐபிஎல் மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரின் ஆட்டங்களில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ருதுராஜ் இதுவரையில் கேப்டன்சியில் முக்கிய மற்றும் வியூக ரீதியிலான முடிவுகளை சரிவர எடுக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
ருதுராஜ் கேப்டன்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதே நிலையில் தொடரும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவது சாத்தியமில்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கேப்டன்சியில் மாற்றம் ஏற்பட்டு அந்த மாற்றம் அணியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அடுத்த நிலைக்கு முன்னேற சாத்தியம் ஏற்படும். அவ்வாறு நிகழாத பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
அணுகுமுறையில் மாற்றம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில் அணுகுமுறையை மாற்றியமைக்காவிட்டால் தொடர் தோல்வியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பது ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது. எதிர் அணிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறோம் என்ற அச்ச உணர்வு மீண்டும் வராத வரை சென்னை அணியால் சரிவில் இருந்து மீள முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும்.