

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர், தனது முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கேமரூன் பான்கிராஃப்ட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பான்கிராஃப்ட் பல ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த விஷயங்களை தற்போது வெளிப்படையாகப் பேசியிருப்பது அவருக்கு நிம்மதியை அளிக்கும் என்றும் வார்னர் கூறியுள்ளார்.
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். இந்த சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்மித் மற்றும் வார்னருக்கு 12 மாதங்களும், பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மீண்டும் விவாதம் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் சுமார் 4,000 வார்த்தைகள் கொண்ட விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்ட பான்கிராஃப்ட், 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியில் இருந்த பலருக்கும் தெரிந்திருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் தனது மனதில் இருந்த விஷயங்களை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் அவரை நீண்ட காலமாக மனதளவில் பாதித்து வந்ததாகவும், தற்போது உண்மைகளைப் பேசியிருப்பது அவருக்கு ஒரு நிம்மதியை அளித்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பான்கிராஃப்ட்டின் கருத்துகளை மதிப்பதாகவும், அவர் பொதுவெளியில் பேசிய முடிவுக்கு தனது ஆதரவு இருப்பதாகவும் வார்னர் தெரிவித்துள்ளார்.
பான்கிராஃப்ட்டின் புதிய குற்றச்சாட்டுகளால் தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளார்.
பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து தனக்குத் தெரியாது என்று கம்மின்ஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், பான்கிராஃப்ட் தனது புதிய கட்டுரையில், இந்த விவகாரம் மூன்று வீரர்களுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றும், ஒட்டுமொத்த அணிக்கும் இதுகுறித்து தெரிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கம்மின்ஸ் சமீபத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்புதான் இந்த விவகாரம் குறித்து மீண்டும் வெளிப்படையாகப் பேசுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகவும் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.