பிரிஸ்பேன் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா 62/ 2 - மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.
பிரிஸ்பேன் டெஸ்ட்: 2 ஆம் நாள் முடிவில் இந்தியா 62/ 2 - மழையால் ஆட்டம் பாதிப்பு
Published on

பிரிஸ்பேன்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்து இருந்தது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஷேன் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 108 ரன்னும், மேத்யூ வேட் 45 ரன்னும் எடுத்தனர். கேப்டன் டிம் பெய்ன் 38 ரன்னிலும், கேமரூன் கிரீன் 28 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 115.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 369 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. தமிழக வீரர்கள் டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். அறிமுக டெஸ்டிலேயே தமிழக வீரர்கள் இருவரும் முத்திரை பதித்தனர்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையாடியது. ரோகித் சர்மாவும், சுப்மன்கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 7-வது ஓவரில் சுப்மன்கில் 7 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 11 ஆக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 44 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து புஜாராவுடன் கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். 26-வது ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் போட்டி ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் லயன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி இன்னும் 307- ரன்கள் பின் தங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com