ஐக்கிய அரபு அமீரகத்தில் தீபக் சாகர் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்: முன்னாள் இந்திய வீரர் பாலாஜி

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் கூடுதல் வீரராக மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் ஆசியக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் இதில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வெற்றி பெற்று முதலில் வெற்றி கணக்கை துவங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான எல்.பாலாஜி இந்திய அணியில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் கூடுதல் வீரராக மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை தவிர்த்து புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்துள்ளனர். என்னை பொறுத்தவரை ஆவேஷ் கானை விட தீபக் சாகர் பந்துவீச்சில் சிறந்தவர். ஏனெனில் தீபக் சாகர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக காயம் காரணமாக அவர் ஆறு மாதங்கள் விளையாட முடியாமல் போனது அவருக்கு பின்னடைவை தந்துள்ளது. ஆனாலும் தீபக்சாகர் ஒரு கடினமான உழைப்பாளி அவருக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருந்து நிச்சயம் அந்த இடத்தை அவர் கெட்டியாக பிடித்துக் கொள்வார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அணிக்காக எப்போதுமே செய்வார்.

மேலும் தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து அவர் பெரிதாக கவலை கொள்ளமாட்டார். நிச்சயம் அவர் மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார். துபாயில் நடைபெறும் போட்டிகளில் அவரை போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டம். ஏனெனில் புதுப்பந்தில் இருபுறமும் அவரால் ஸ்விங் செய்ய முடியும். தற்போது உள்ள இந்திய அணியில் அவரைப் போன்ற வீரர் நிச்சயம் தேவை. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com