மான நஷ்டஈடு வழக்கு: டோனியிடம் சாட்சியம் பதிவு செய்ய பெண் வக்கீல் நியமனம்

மான நஷ்டஈடு வழக்கில் கிரிக்கெட் வீரர் டோனியிடம் சாட்சியம் பதிவு செய்ய பெண் வக்கீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தனியார் டி.வி. நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பேசும்போது, கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் டி.வி. நிறுவனம் உள்ளிட்டோரிடம் ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் டோனி 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. டோனி சாட்சியம் அளிக்க ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு வந்தால், பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும். அதனால், வக்கீல் கமிஷனர் ஒருவரை நியமித்து, சாட்சியத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று டோனி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில், டோனியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஜி.ஜெயஸ்ரீ என்பவரை வக்கீல் கமிஷனராக நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், ‘‘டோனியிடம் அக்டோபர் 20-ந்தேதி முதல் சாட்சியத்தை வக்கீல் கமிஷனர் ஜெயஸ்ரீ பதிவு செய்யலாம். இதற்காக அவருக்கு முதல் கட்டமாக ரூ.30 ஆயிரத்தை கட்டணமாக டோனி வழங்கவேண்டும்'' என்று நீதிபதி கூறியுள்ளார்.






