

தரம்சாலா,
தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு அரிதான நிகழ்வு அரங்கேறியது. டெல்லி அணியின் பந்துவீச்சு வியூகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், போட்டியின் மிகப்பெரிய ஆச்சரியமாக டெல்லி அணி ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் கூட பயன்படுத்தாமல் 20 ஓவர்களையும் வீசி முடித்தது. டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சு முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், டெல்லியின் இந்த முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், ஆகிப் நபி, மாதவ் திவாரி மற்றும் லுங்கி இன்கிடி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தலா 4 ஓவர்களை வீசி முடித்தனர்.
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் கூட பயன்படுத்தாமல் பந்துவீசியது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அரிய நிகழ்வை டெல்லி அணி நிகழ்த்தி இருக்கிறது.