மகளிர் பிரீமியர் லீக் - டெல்லியிடம் போராடி தோற்ற உ.பி.வாரியர்ஸ்

இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின.
மும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. இந்த போட்டிக்கான டாஸை வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, உ.பி. அணி களமிறங்கி பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் உ.பி.வாரியர்ஸ் வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். அந்த அணியில் மேக் லேனிங் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹர்லின் டியோல் 47 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் உ.பி.வாரியர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 155 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. டெல்லி அணியில் தொடக்க வீராங்கனைகளாக லிசெல் லீ மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர். ஷபாலி வர்மா நிதானமாக விளையாட லிசெல் லீ அதிரடி காட்டினார். லிசெல் லீ 31 பந்துகளில் அரை சதம் விளாசினார். பின்னர் ஷபாலி வர்மா 36(32) ரன்களிலும் லிசெல் லீ 67(44) ரன்களிலும் அவுட்டாகினர்.
தொடர்ந்து கள்மிறங்கிய லாரா வோல்வார்ட் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்போது ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21 (14) ரன் அடித்து அவுட்டானார்.
இறுதியில் 3 விக்கெட்டை மட்டும் இழந்த டெல்லி அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்ஸ் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. லாரா வோல்வார்ட் 25(24) ரன்களுடனும் மரிசான் காப் 5(6) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். உ.பி. அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






