தவான், யூசுப் பதான் அதிரடி.. ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா

image courtesy:PTI
லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
லீட்ஸ்,
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி லீட்சில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உத்தப்பா - ஷிகர் தவான் களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடியில் உத்தப்பா 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடு டக் அவுட்டிலும், ரெய்னா 11 ரன்களிலும், யுவராஜ் சிங் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் ஷிகர் தவான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் அவருடன் கை கோர்த்த யூசுப் பதான், ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா சாம்பியன்ஸ் அணி 200 ரன்களை எட்டியது.
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா சாம்பியன்ஸ் 203 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 91 ரன்களுடனும், யூசுப் பதான் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது.






