7-வதாக இறக்கப்பட்ட டோனி! இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோக யார் காரணம்...

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
7-வதாக இறக்கப்பட்ட டோனி! இறுதிப்போட்டி வாய்ப்பு பறிபோக யார் காரணம்...
Published on

லண்டன்,

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதியது. அப்போது நடைபெற்ற போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது.

அன்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் சேர்த்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராக இருந்தபோது மழை பெய்தது.

இதனையடுத்து இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 191 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் தகர்த்து அபார வெற்றிப் பெற்றது. அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணித் தலைவரான வில்லியம்சனின் விக்கெட்டை விராட் கோலி வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வாய்ப்பு 12 ஆண்டுகள் கழித்து வில்லியம்சனிற்கு நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி மூலம் கிடைத்தது. நேற்றைய ஆட்டத்தின் மூலம் 12 வருடங்களுக்கு முன்பு அரை இறுதியில் அடைந்த தோல்விக்கு வில்லியம்சன் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனுபவ வீரர் டோனியை முன்கூட்டியே களம் இறக்காதது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

240 ரன்கள் என்கிற எளிய இலக்கை இந்திய அணி 30 ஓவர்களில் கடந்துவிடும் என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ரோஹித் ஷர்மா ஆட்டம் இழந்த பிறகு அதில் சிறு பின்னடைவு ஏற்பட்டது. அதே சமயம் கோலி ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணியின் நம்பிக்கை தூள் தூளாகி விட்டது.

கோலி ஆட்டம் இழந்த பிறகு அனைவரும் எதிர்பார்த்தது டோனி களம் இறங்குவார் என்று தான். ஆனால் டோனி வரவில்லை. மாறாக ரிஷப் பண்ட் களம் இறக்கப்பட்டார். இக்கட்டான சூழலில் அனுபவம் இல்லாத ரிஷப் பண்ட் களம் இறங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் ரிஷப் பண்ட் நியூசிலாந்து வீரர்களை எதிர்கொண்டது ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது. அதே சமயம் அவர் அவசரப்பட்டு ஆடி ஆட்டம் இழந்தது அவரது அனுபவம் இன்மையை காட்டியது. இதன் பிறகாவது டோனி இறங்குவார் என்று பார்த்தால் இல்லை. ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு தான் டோனி களம் கண்டார்.

அப்போதே இந்தியா பாதி தோல்வி அடைந்திருந்தது. மேலும் மனதளவிலும் இந்திய வீரர்கள் தோல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் டோனி பொறுப்புடன் ஆடினார். அவரது அனுபவம் போட்டியில் எதிரொலித்தது. டோனி மட்டும் கோலிக்கு பிறகு இறங்கியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட் விழுவதை தடுத்திருக்கலாம் என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.

விக்கெட் விழாமல் இருந்திருந்தாலே இந்திய அணி எளிதாக இலக்கை எட்டியிருக்கும். அந்த வகையில் டோனியை சரியான இடத்தில் இறக்காமல் செய்த தவறே இந்திய அணியின் தோல்விக்கு காரணம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com