அந்த விஷயத்தில் தோனி பிக்பாக்கெட் திருடனை விட வேகமானவர் - ரவி சாஸ்திரி புகழாரம்

ஐ.சி.சி. ஹால் ஆப் பட்டியலில் இணைந்த தோனிக்கு ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 3 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த சாதனையாளர். கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். விக்கெட் கீப்பங்கிலும் சாதனைகள் படைத்துள்ள அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் திறமை படைத்தவர்.

அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல இளம் வீரர்களின் திறமைகளை உலகிற்கு அடையாளம் காட்டியவர். ஐ.பி.எல். தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

இதனால் இவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்த்து கவுரவித்துள்ளது. இதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தனது வாழ்த்துகளை வித்தியாசமாக கூறியுள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- "அவருக்கு (தோனி) ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமான கைகளை தோனி ஸ்டம்பிங் செய்வதில் கொண்டுள்ளார். நீங்கள் இந்தியாவில், குறிப்பாக அகமதாபாத் போன்ற பெரிய மைதானங்களுக்கு சென்றால், எம்.எஸ். தோனி போன்றவர்கள் உங்கள் பின்னால் இருப்பதை விரும்ப மாட்டீர்கள். உங்களுடைய பணப்பை காணாமல் போய்விடும்.

அவர் டக் அவுட் ஆனாலும் சரி உலகக்கோப்பையை வென்றாலும் சரி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடித்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com