தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - ஆஸி. முன்னாள் கேப்டன் புகழாரம்

Image Courtesy: @ChennaiIPL / @IPL
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 19.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இப்போதும் தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனவும், லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் பினிஷிங்கை விட, கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததாகவும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
தோனி களத்திற்கு வந்தாலே எப்போதும் ரசிகர்கள் சத்தம் அதிகமாக இருக்கும். அவருடைய கீப்பிங் எனக்கு ஆச்சரியமில்லை. இப்போதும் தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். அந்த வேலையில் நீண்ட காலமாக அவர் தொடர்ச்சியாக அசத்துவது அற்புதமானது. அதை விட இன்று (நேற்று) அவருடைய கேப்டன்ஷிப் மிகச்சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன்.
மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை மாற்றி மாற்றி வேகமாகப் பயன்படுத்தி அவர் அழுத்தத்தை உண்டாக்கினார். சூழ்நிலையைப் படித்து அதற்குத் தகுந்தார் போல் அட்ஜஸ் செய்து கொண்ட அவர், தனது மொத்த கெரியரிலும் எவ்வாறு ஸ்பின்னர்களை இணைந்து பயன்படுத்தியிருப்பாரோ, அப்படி இன்று (நேற்று) பயன்படுத்தினார். தோனியின் கேப்டன்ஷிப் இன்று (நேற்று) நடந்ததில் சிறந்த விஷயமாக இருந்தது.
ஸ்பின்னர்கள் பிட்ச்சை சரியாகப் பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுத்து போட்டியின் வேகத்தைக் குறைத்தார்கள். அந்த வகையில் களத்தில் இன்று (நேற்று) தோனியின் அனுபவம் போட்டியை தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






