கடந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாட தோனிதான் காரணம் - ஷசாங்க் சிங்

image courtesy:instagram/shashanksingh027
தோனி வழங்கிய அறிவுரை குறித்து ஷசாங்க் சிங் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பல அறிமுக வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பஞ்சாப் அணியில் அறிமுகமான ஷசாங்க் சிங் ஆவார். அவரை இம்முறை ரூ. 5.5 கோடிக்கு பஞ்சாப் தக்கவைத்துள்ளது.
கடந்த சீசனில் மற்றொரு வீரருக்கு பதிலாக தவறுதலாக பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட ஷசாங்க் சிங் இம்முறை அந்த அணியாலயே ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் 354 ரன்களை 164 என்ற அதிரடியான ஸ்ட்ரைக்ரேட்டில் விளாசி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவரை மீண்டும் பஞ்சாப் தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடியது குறித்தும், இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி அவருக்கு வழங்கிய அறிவுரை குறித்தும் சில கருத்துகளை ஷசாங்க் சிங் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு ஒருமுறை தோனியை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு டைத்தது. அப்போது நான் பினிஷராக இருப்பது குறித்து நிறைய சந்தேகங்களை அவரிடம் கேட்டுக் கொண்டேன். அந்த நேரத்தில் தோனி எனக்கு கூறிய அறிவுரை இதுதான். அதாவது, 'நீ விளையாடும் 10 போட்டிகளில் உனது அணியை மூன்று முறை வெற்றி பெற வைத்தாலே உலகின் 5 முதல் 10 சிறந்த பினிஷர்களில் நீயும் ஒருவராய் இருப்பாய்' என்று கூறியிருந்தார். அவர்கூறிய அந்த வார்த்தைகள் எல்லாம் எனக்கு தன்னம்பிக்கை அளித்தது.
அதாவது நாம் விளையாடும் போட்டிகள் அனைத்திலுமே நம்மால் வெற்றிபெற முடியாது என்கிற உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேவேளையில் அணிக்காக கடைசி நேரத்தில் நின்று போட்டியை முடிக்கும்போது எந்தளவு நிதானத்துடன் இருக்க வேண்டும் எவ்வாறு சூழலை அணுக வேண்டும் என்று கூறிய அவரது நுணுக்கங்களை எல்லாம் கருத்தில் வைத்துக் கொண்டுதான் பயிற்சி மேற்கொண்டேன். அந்த வகையில் கடந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது" என்று கூறினார்.






